நளின் பண்டாரவின் குற்றச்சாட்டிற்கு RDA மறுப்பு
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான கணக்கிலிருந்து ஒப்பந்தக்காரர்களுக்கு 380 மில்லியன் ரூபாய் தவறுதலாக மீண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

குறித்த அதிகாரசபையின் பிரதான கணக்கிலிருந்து 2023 ஆம் ஆண்டில் ஏற்கனவே பணம் செலுத்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு, சுமார் 380 மில்லியன் ரூபாய் தவறுதலாக மீண்டும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில், நளின் பண்டார எம்.பி சமூக ஊடகங்கள் ஊடாக உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இந்த அறிக்கை முற்றிலும் அடிப்படை மற்றும் ஆதாரமற்றது என்பதுடன் உண்மைகளை மறைத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.