வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டும் இலங்கை ; 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது அந்த ஆறு நாட்களில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் சுமார் 18 சதவீதமாகும்.

அதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.
இதேவேளை, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
இதில் இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக காணப்படுகிறது. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 346,057 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதே காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மொத்த வருகை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக காணப்படுவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் பங்கு சுமார் 9.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.