போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு தடுப்பு காவல் ; நீதிமன்றம் கடும் நடவடிக்கை
110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ் போதைப்பொருள் தொகையுடன் கைதான 22 பிக்குகளையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (26) பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகர உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் இந்தக் காவி உடை தரித்த நபர்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர், கம்பஹா - மீகஹமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தக் காவி உடை தரித்த குறித்த 22 சந்தேக நபர்களும், நேற்று (25) இரவு 10.11 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.
தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, இவர்கள் அனைவரிடமும் இருந்த ஒரே வகையிலான, வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பயணப் பொதிகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தினர்.
கல்வி உபகரணங்கள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பயணப் பொதிகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த "குஷ்" மற்றும் "ஹேஷ்" போதைப்பொருட்களை அதிகாரிகள் இதன்போது மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 22 நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொருவரிடமும் இருந்த பயணப் பொதிகளிலும் சுமார் 5 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 112 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தப் போதைப்பொருள் தொகுதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகும்.

அத்துடன், காவி உடை தரித்த குழுவினர் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைதான முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் போது, இச்சுற்றுப்பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்குப் பதிலாக, அனுசரணையாளர்களினால் வழங்கப்பட்ட, பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் அடங்கிய பயணப் பொதிகளை இலங்கைக்கு எடுத்து வருமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்த மூவரும் கடந்த மாதமும் 12 பேரைக் கூட்டிச் சென்று தாய்லாந்துக்குச் சென்று வந்துள்ளதுடன், அடுத்த மாதம் மற்றுமொரு குழுவை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்களும் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இந்தச் சாசன விரோதச் செயலில் ஈடுபட்ட போலிப் பிக்குகள் குறித்து அந்தந்த நிக்காயப் பிரிவுகள் ஊடாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, அவர்களைச் சாசனத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.