தனது சகோதரியை கத்தியால் தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
தனது சகோதரியை வீச்சு கத்தியால் தாக்கிய புத்தளம் - பல்லம பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்லம, திம்பிரிகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனது சகோதரியுடன் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது சகோதரியை வீச்சுக் கத்தி ஒன்றினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பல்லம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சகோதரி, சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் பொலிஸாரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.