கடற்படையின் ஓய்வுபெற்ற வைத்திய உதவியாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற வைத்திய உதவியாளர் ஒருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் இன்று (14) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சுற்றிவளைப்பு
வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முறைப்பாட்டாளரின் மூத்த மகளை இந்த ஆண்டு பாடசாலை ஒன்றின் முதலாம் தரத்தில் அனுமதிப்பதற்காக 3 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
அதில் ஒரு இலட்சம் ரூபாய் ஏற்கனவே மூன்று சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், எஞ்சிய இரண்டு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.