டித்வா சூறாவளியில் 68 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து ; சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாட்டில் டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அபாய எச்சரிக்கையையும் மீறி பாலத்தை கடக்க முயன்று இரு பயணிகளின் மரணத்திற்கு காரணமான பேருந்து சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உட்பட 68 பயணிகளுடன் பயணித்த குறித்த பேருந்து, பொலிஸாரின் கட்டளைகளையும் பொதுமக்களின் எச்சரிக்கையையும் மீறி, பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது.

இரண்டு பயணிகள் பலி
இந்த முயற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் சாரதியான பலகொல்லகம, சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நொச்சியாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவரை ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீதி விபத்துகளின் போது பொதுவாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் 296 மற்றும் 300 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கம் சாரதிக்கு இருக்கவில்லை எனவும், கொலைக்குற்றச்சாட்டு என்பது மிக அதிகப்படியானது எனவும் சட்டத்தரணிகள் வாதிட்டு பிணை கோரினர். இந்த நிலையில் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.