யாழின் எரிபொருள் நிலவரம் குறித்து வெளியான புதிய தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியகங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்குத் தொடர்ச்சியாக பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாளைய தினம் 290,400 லீட்டர் பெட்ரோல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மார்ச் முதலாம் திகதி 71,600 லீட்டர் பெட்ரோலும், மார்ச் 02ஆம் திகதி 2,04,600 லீட்டர் பெட்ரோலும் மார்ச் 03ஆம் திகதி 1,91,400 லீட்டர் பெட்ரோலும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளை சேமித்து வைப்பதன் மூலம் ஒரு செயற்கையான தட்டுப்பாட்டு நிலையை உருவாக்குவதாகவும், இதனைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 36 பெட்ரோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.