2027 உலகக் கிண்ணத்துக்கான திட்டம் ; வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் யோசனை
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவதற்கான முழுத் தகுதியையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடதுகை மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர்களின் கலவையானது அணியின் பலத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்த ஃபரூக் என்ஜினியர், இந்த அணுகுமுறை எதிரணிகளுக்கு சவாலாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஷுப்மன் கில்லை 4ஆம் இலக்கத்தில் களமிறக்குவது இந்திய அணியின் மத்திய வரிசையை வலுப்படுத்தும் என்றும், விராட் கோலி 3ஆம் இலக்கத்தில் தொடர்ந்து விளையாடலாம் என்றும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
2027 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்திய அணி தனது அணிக்கட்டமைப்பைத் திட்டமிடும் நிலையில், இளம் வீரர்களின் பங்களிப்பு தொடர்பான விவாதங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன.