தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி
2026 டி20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவு செய்து, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இறுதிப்போட்டிக்கு தகுதி
கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (04) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்த நியூசிலாந்து அணியின் அழைப்பையேற்றுத் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி சற்றுத் தடுமாறிய போதிலும், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மார்கோ ஜான்சன் 54 ஓட்டங்களையும், இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 34 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர்.
இவர்களின் சிறப்பான இணைப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணியைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசிய நியூசிலாந்து அணி சார்பாக, ரச்சின் ரவீந்திரா, கோல் மெக்கொன்சி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே ருத்ரதாண்டவம் ஆடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பின் ஆலன் தென்னாபிரிக்கப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
வெறும் 33 பந்துகளில் சதம் விளாசிய அவர், ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்று டி20 அரங்கில் மாபெரும் சாதனை படைத்தார்.
அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் உதவியுடன், நியூசிலாந்து அணி வெறும் 12.5 ஓவர்களிலேயே 173 ஓட்டங்களைப் பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.