முச்சக்கர வண்டி சாரதிக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் ; அமைச்சரின் முக்கிய தகவல்
முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழிற்கல்வி
பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் மேலதிக கல்வியைத் தொடராதவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அவற்றில் சில முன்மொழிவுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
அரசாங்கம் உரிய பரிசீலனைகளை மேற்கொண்டதன் பின்னர், நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.