ஞானசார தேரரின் சீவரம் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
ஞானசார தேரரின் சீவரத்தை மீண்டும் அவருக்கு அணிவிப்பது தொடர்பில் உத்தரவு பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல இன்று (23) சுட்டிக்காட்டினார்.
இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி ஞானசார தேரருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
எதிரி சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக வீரசூரிய சமர்ப்பணம் செய்கையில்; சிறைச்சாலை விதிகளை மீறாத வகையில், பௌத்த பாரம்பரியங்களுக்கு அமைவாக ஞானசார தேரருக்குச் சீவரத்தை மீண்டும் முறைப்படி அணிவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோட்டே மகாநாயக தேரர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் முன்னதாகவே எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தார் எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், அக்கோரிக்கைக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “நான் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் இல்லையென்றாலும், பௌத்த மத ஆச்சாரங்களின் அடிப்படையில் இது நியாயமானதொரு கோரிக்கையாகும்.
எனது கட்சிக்காரர் திட்டமிடப்பட்ட குற்றவாளி அல்லர்” எனச் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் காரணமாக எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலை மற்றும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் கருத்திற்கொண்டு, எதிரியை மின்னணு ஊடகம் (இணையவழியாக) மூலமாகவே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்த மனுவொன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, வழக்கு விசாரணைக்குத் தேவையான போதிய மின்னணு சாதனங்களைப் பெற முடியாதிருந்தமையால், வாட்ஸ்அப் காணொளி அழைப்பு (WhatsApp video call) மூலமாகவே எதிரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிரதிவாதி தரப்பினால் கோரப்பட்ட நிவாரணம் குறித்து வினா எழுப்பிய நீதிபதி; சீவரத்தை மீண்டும் அணிவிப்பது தொடர்பாக நீதிமன்றத்தால் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறினார்.
மேலும், இவ்வாறான கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பெருமளவிலான பௌத்த பிக்குகள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“வெவ்வேறு குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இன்னும் பல பௌத்த பிக்குகள் உள்ளனர்.
அப்படியென்றால், மேலதிக வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் முன்னர், அந்த பிக்குகள் அனைவருக்கும் மகாநாயக தேரர்களால் சீவரம் அணிவிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமாகிவிடுமா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், 2024 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்ட (திருத்த) கூற்றின் கீழ், குற்றம் ஒப்புக்கொள்ளும் உடன்படிக்கைக்கு (Plea agreement) வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அடுத்த வழக்கு விசாரணைத் திகதியில் சமர்ப்பணங்களை மேற்கொள்ளுமாறு தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில், இவ்வழக்கு ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
புனித குர்ஆன் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எதிரி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அசோக வீரசூரியவுடன் சட்டத்தரணிகளான சஞ்சய மரபே, பசான் கருணாரத்ன ஆகியோர் ஆஜராகியிருந்த அதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் அரசுச் சட்டத்தரணி சுபுன் ரணசிங்க ஆஜராகியிருந்தார்.