திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை; புதிய கட்டுப்பாடுகள்
வடக்கில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அதீத ஒளி மின்விளக்குகள், அதிக சத்தம் கொண்ட வானவேடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் அதீத ஒளி மின்விளக்குகள் மற்றும் வானவேடிக்கைகளால் 500க்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் இடம்பெற்றிருந்தது.

500க்கும் அதிகமானோர் கண் பாதிப்பு
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக தேவையான விதிமுறைகளை உருவாக்குவதுடன், மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கும்போது மின்விளக்குகள், ஒலியமைப்புகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு நிபந்தனைகளை கட்டாயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.