கிரிஷ் வழக்கில் இன்றைய வாதப்பிரதிவாதங்களின் முழு விபரம்
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இன்று (23) நிராகரித்தார்.
இதன்படி, நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கலின்போது 70 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாமல் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பை அறிவித்த நீதவான், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் செல்லுபடியாகாது என்ற சந்தேகநபர் தரப்பின் வாதத்தை நிராகரித்தார்.
மேலும், பிணை வழங்குவதற்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த நீதவான், சந்தேகநபர் தரப்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான விடயங்கள் சட்டரீதியான வாதங்களாகவே காணப்படுவதாகவும், அவை பிணை வழங்குவதற்கான விசேட காரணங்களாக அமையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்தே பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை, வழக்கின் மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற காலத்தில் கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய அஸ்சர்யா சோனியை ஐந்தாவது சந்தேகநபராகப் பெயரிடவுள்ளதாகத் தெரிவித்தனர்.
70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கை மூன்று சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் அஸ்சர்யா சோனியும் நிறுவனத்தின் பணிப்பாளராகப் பதவி வகித்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின்போது பெறப்பட்ட வங்கி அறிக்கைகள் மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், முன்னதாக அச்சம் காரணமாக வாக்குமூலங்களை வழங்கத் தயங்கிய சில சாட்சிகள், தற்போது விரிவான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதுடன், பல ஆவணங்களையும் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

கிரிஷ் நிறுவனம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் காலத்தில் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றின் கையெழுத்தை, அவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ள கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பரிசோதிக்கவும் எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வழக்கு நடவடிக்கைகள் அநீதியான முறையில் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
சில வழக்குகளில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேரடியாக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாகவும், ஏனைய வழக்குகளில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் பணிப்பாளர் நாயகத்தின் சான்றிதழைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நடைமுறைகள் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம, வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.