இந்தியாவில் கைதான யாழ் நபர்கள் ; வெளியான அதிர்ச்சி காரணம்
படகு மூலம் கஞ்சா போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக இரண்டு இலங்கையர்களை இந்தியா - புதுச்சேரி மாநில சிறப்புக் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
இதன்போது ஒரு ஃபைபர் படகு, 50,000 இந்திய ரூபாய்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் கொள்வனவு
இலங்கையைச் சேர்ந்த குறித்த இரண்டு பேரும், உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் இருந்து கஞ்சா போதைப்பொருளை கொள்வனவு செய்ய கடல் வழியாக வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காரைக்காலில் பொலிஸார் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் நடமாடிய குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் - பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கடற்றொழிலாளர்கள் என்பதையும் பொலிஸார் விசாரணையின்போது தெரிந்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த மாதம் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும் காரைக்காலில் வைத்து போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.