காதலனுடன் ஓட்டமெடுத்த தாய் ; தீயில் கருகி பலியான மகன் ; இலங்கையை உலுக்கிய சம்பவம்
பலாங்கொடை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முற்றிலுமாக எரிந்து எட்டு வயது சிறுவன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு
குடும்ப தகராறு காரணமாக 08 திகதி இரவு மனைவி வேறொரு நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், குறித்த பெண்ணின் கணவரும் மனைவியை தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் சமயத்தில் எட்டு வயது மட்டும் வீட்டில் இருந்துள்ளதுடன் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததுள்ளது. அதனை பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் அந்த நேரத்தில் கணவரும் வீடு திரும்பியிருந்தார்.
இது தொடர்பாக, இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மனைவிக்கு சிறிது காலமாக திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததும் அதன் காரணமாக தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன் வீடு தீப்பிடித்தது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.