யாழ் விரிவுரையாளர் தயாளினி கொலை வழக்கு ; மகள், மருமகன் தொடர்ந்தும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சித்த மருத்துவப் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
54 வயதான வைத்தியர் தயாளினி திலீபன் கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் மார்ச் 21ஆம் திகதி தனக்கிளப்பு காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது மகளும் மருமகனும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களான இருவருக்கும் எதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசித்துக் காட்டப்பட்டன.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை, கொலை செய்தமை மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான சுருக்க முறையற்ற விசாரணைகளை (Non-Summary Inquiry) விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக நீதவான் அறிவித்தார்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை வழக்கு தொடர்பான மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் விசாரணைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.