சாட்டி மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம் ; நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், அங்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால் இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சகோதரரான மாணிக்கவாசகர் இளம்பிறையன், டக்ளஸ் பிரபாகரன் மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் அனிபா ராஜீவ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகளில் ஒருவரான சுவாமிநாதன் பிரகலாதன் சார்பில் சட்டத்தரணிகளான பெலினா, அஜித் சங்கர், கௌரிதரன் மற்றும் ஸ்ரீராகவன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இதன்போது, பொலிஸாரால் தடை உத்தரவு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நடைமுறை மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் சட்டத்தரணிகள் தமது ஆட்சேபனைகளையும் வாதங்களையும் உரிய ஆதாரங்களுடன் முன்வைத்தனர்.
சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், வழக்கை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.