அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகருக்கு சர்வதேச கவனம்
கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் ஏற்கனவே 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் இரண்டு பாரிய குடியிருப்புத் திட்டங்கள், நவீன உணவகங்கள் மற்றும் மாநாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் சில முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு வரிச் சலுகைகள் மாத்திரம் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர் நம்பிக்கை, சிறந்த தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.