இலஞ்ச வழக்கில் சிக்கிய முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி விடுவிப்பு
ஹொரவ்பொத்தான பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், நெல் களஞ்சியசாலையை நடத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 40,000 ரூபா இலஞ்சம் கோரி, பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியங்களில் முரண்பாடுகள்
இது தொடர்பில் வழக்கு தொடர்ந்த தரப்பினர் வலுவான ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதி, முறைப்பாட்டாளர், வர்த்தகர் மற்றும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதி சட்டத்தரணி தர்ஷன குருப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், சாட்சிகளை அழைக்காமலேயே குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன்படி, 2022 நவம்பர் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வர்த்தகர் ஒருவரிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் தலா 20,000 ரூபா வீதம் மொத்தமாக 40,000 ரூபா இலஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது குறித்த வர்த்தகர் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் சாட்சியமளித்திருந்தனர்.
எனினும், சாட்சியங்களில் போதிய ஒற்றுமை இல்லாததுடன், குற்றம் சாட்டப்பட்டவரை தற்காப்பு வாதத்தை முன்வைக்கப் பணிக்கும் அளவுக்கு வலுவான வழக்காக நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி கூறி இவ்வழக்கை நிறைவு செய்தார்.