கள்ளக்காதலியை உல்லாசத்திற்கு அழைத்து தொழிலாளி செய்த கொடூர செயல்
இந்தியா கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா செங்காவி கிராமத்தில் 50 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்காவி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணமான லட்சுமி தேவம்மா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையிலான தொடர்பு நெருக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, லட்சுமி தேவம்மாவுக்கு 29 வயதுடைய இளைஞர் ஒருவருடனும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனை அறிந்த நாகராஜ் அவரைக் கண்டித்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இளைஞருடனான தொடர்பை அவர் தொடர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த நாகராஜ், ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி இடம்பெற்ற தோட்டப் பகுதிக்கு லட்சுமி தேவம்மாவை வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நாகராஜ் உருட்டுக்கட்டையால் லட்சுமி தேவம்மாவின் தலையில் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சடலத்தை தோட்டத்தின் மறைவான பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மறுநாள் காலை தோட்டத்தின் உரிமையாளர், பாதி எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக துமகூரு அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், நாகராஜை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. செங்காவி கிராமத்தில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.