மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுகாதார பரிசோதகர் கைது
அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பின்னர் சந்தேகநபர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கடந்த 18ஆம் திகதி மாணவர்களுக்கான வழமையான சுகாதாரப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாலியல் தொல்லைகளை ஏற்படுத்தியதாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம், பாடசாலை அதிபர் ஊடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறார்களுடன் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குறித்த அதிகாரி இவ்வாறான கடமைகளில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் அவருக்கு எதிராக உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.