ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஹோட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இணையவழி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்யும் முறையின் மூலம், எந்தவொரு நேரத்திலும் பூங்காவிற்குள் இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் துல்லியமாகக் ஒழுங்குபடுத்த முடியும்.

அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உயர்தர சுற்றாடல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கவும் புதிய கட்டண மூலோபாயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி, தனது தனித்துவமான உயிர்பல்வகைமை பெருக்கத்திற்கும் நுட்பமான மலைக்காட்டுச் சூழலுக்கும் பெயர் பெற்றதாகும்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டன் சமவெளி பூங்கா காப்பாளர் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து நிலையான சூழல் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.