நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது
மாரவில நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய கடற்றொழிலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு, மாரவில நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்தபோது அவர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அங்குலானை மற்றும் வாத்துவ பகுதிகளில் வெவ்வேறு முகவரிகளில் அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த தந்தை ; அதீத பாசத்திற்காக இப்படியா? மகளின் செயலால் ஆடிப்போன பொலிஸார்
இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர், வாத்துவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கல்கிஸ்ஸை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன், கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவினால் பிறப்பிக்கப்பட்ட சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்புடன் தொடர்புடைய நபராகவும் இவர் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.