ஜனாதிபதிக்கும் நிர்மாணத் துறையினருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் நிர்மாணத் துறையின் முக்கிய தரப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிர்மாணத் துறையின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்காலப் போக்குகள் குறித்து இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி, அத்துறையை மீண்டும் வலுப்படுத்தி அதன் நிலைபேறான வளர்ச்சிக்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தரப்பினர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.

பிரதான சவால்கள்
நிர்மாணத் துறை தற்போது எதிர்கொண்டுள்ள பிரதான சவால்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
நிர்மாணத் துறை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கும் நேரடியாகப் பங்களிப்புச் செய்வதனால், அதில் காணப்படும் தடைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதன் ஊடாக இத்துறையில் புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் நிர்மாணத் துறையின் தரப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.