உரிமையாளரின் மனைவியை இரகசியமாகக் கண்காணித்த ஊழியர் ; மகளால் அம்பலமான திடுக்கிடும் ரகசியம்
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் மனைவியின் கைப்பேசியில் ரகசியமாகக் கண்காணிப்பு செயலியை நிறுவி, அவரது அந்தரங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து வேவு பார்த்த ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நகைக்கடை உரிமையாளரின் மனைவி தனது கைப்பேசியில் ஸ்கிரீன் கார்ட் (Screen Guard) ஒட்டுவதற்காக அதனை கணேஷிடம் கொடுத்துள்ளார்.

இதன்போது, கைப்பேசியின் கடவுச்சொல்லைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட கணேஷ், அதனைப் பயன்படுத்தி குழந்தைகளைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'Parental Control' செயலி ஒன்றை ரகசியமாக நிறுவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் நகைக்கடை உரிமையாளரின் மனைவியின் கைப்பேசி நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் உரிமையாளரின் மகள் கைப்பேசியில் நிறுவப்பட்டிருந்த குறித்த செயலியைக் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கணேஷைக் கைது செய்துள்ளனர்.
நம்பிக்கையின் அடிப்படையில் கைப்பேசியை ஒப்படைத்த நிலையில், அதனைப் பயன்படுத்தி ரகசியமாகக் கண்காணிப்பு செயலியை நிறுவி வேவு பார்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.