வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய பூசாரி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோர் வவுனியா நீதவான் நீதிமன்றினால் இன்று திங்கட்கிழமை (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கொன்றுடன் தொடர்புடையதாக, ஆலயத்தின் பூசாரி அ. மதிமுகராசா, முன்னாள் தலைவர் செ. சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் து. தமிழ்ச்செல்வன் ஆகியோரை இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்புக்கட்டளை விடுக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை
இதற்கமைய, ஆலயத்தின் பூசாரியும் முன்னாள் தலைவரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி தி. திருவருள் மன்றில் முன்னிலையாகியிருந்தார். இதேவேளை, ஆலயத்தின் முன்னாள் செயலாளரான து. தமிழ்ச்செல்வன் தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகின்றமையால் இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.