அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ ; இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ‘அக்வான்’ (Akwan) புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த புயல் சென்னைக்குக் கிழக்கே சுமார் 610 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இது தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நெல்லூர் – துனி பகுதிகளுக்கு இடையே அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 14ஆம் திகதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் ஒன்று உருவானது. பின்னர் அது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்நிலையில், தொடர்ந்து வலுப்பெற்ற குறித்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (16) இரவு சுமார் 7 மணியளவில் புயலாக உருவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெறுவதுடன், நாளை மறுநாள் அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயலின் நகர்வு, காற்றின் வேகம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.