இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் அபாயம் ; சுகாதார துறை எச்சரிக்கை
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்கள்
தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை ஆகியவை நோய் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, வயல் நிலங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேறும் சகதியுமான இடங்களில் பணியாற்றுவோர் உரிய பாதுகாப்பு காலணிகளை அணிவதுடன், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நீண்டகாலமாக தேங்கியுள்ள வெள்ளநீர் மற்றும் அசுத்தமான நீர் காணப்படும் பகுதிகளில் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.