மின்னணு வருமான வரி உரிம சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
மின்னணு வருமான அனுமதிப் பத்திர முறையை (e-Revenue Licence) புதுப்பிக்கும் பணிகள் காரணமாக, மாகாணங்களில் வழங்கப்படும் மின்னணு வருமான அனுமதிப் பத்திர சேவை இன்று (25) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இந்தச் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும்.

இதன்படி, மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய எட்டு மாகாணங்களில் மின்னணு வருமான அனுமதிப் பத்திர சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
பயனாளர்களுக்கு மேலும் வினைத்திறனான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில் இந்தத் தொழில்நுட்பப் புதுப்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மின்னணு வருமான அனுமதிப் பத்திர சேவைகளை வழமைபோன்று பெற்றுக்கொள்ள முடியும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.