மத்திய வங்கியின் வட்டி வீத முடிவில் தாக்கம் ஏற்படுமா? ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் கணிப்பு
இலங்கை மத்திய வங்கி தனது அடுத்தகட்ட நாணயக் கொள்கைத் தீர்மானத்தை எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.
இதன்போது, வட்டி வீதங்களில் மாற்றம் செய்யப்படாமல் தற்போதைய நிலையே தொடரும் என ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் நிதி ஆய்வு நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய வங்கியின் ஒருநாள் கொள்கை வட்டி வீதம் தற்போதுள்ள 8.75 சதவீதத்திலேயே தொடர்வதற்கு 60 சதவீத வாய்ப்புள்ளதாகவும், அதேவேளை வட்டி வீதத்தை 50 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிப்பதற்கு 40 சதவீத வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட 100 அடிப்படைப் புள்ளிகள் கொண்ட வட்டி வீத அதிகரிப்பின் தாக்கம் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஒதுக்கீட்டுத் தேவைகள் மூலம், வட்டி வீதங்களை அதிகரிக்காமல் வங்கித் துறையில் காணப்படும் அதிகப்படியான பணப்புழக்கத்தை உறிஞ்சிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விட பணவீக்கம் அதிகரித்து, ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஜூலை மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பான நிலைமைகளும் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்படும் காரணிகளில் ஒன்றாக அமையக்கூடும்.
மேலும், உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களாக உள்ளதாக ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் தெரிவித்துள்ளது.
இதனால், எதிர்வரும் 30ஆம் திகதி மத்திய வங்கி வெளியிடவுள்ள நாணயக் கொள்கைத் தீர்மானம் பொருளாதாரத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.