அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; 19, 22 வயது இளைஞர்கள் இருவர் கைது
அம்பலாங்கொட, கஹாவ பகுதியில் நபர் ஒருவரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்களை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் நேற்று (24) காலை பத்தபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அலுத்வல மற்றும் மீட்டியாகொட பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு முயற்சிக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரும் இவர்களே என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த இரண்டு பாதுகாப்புத் தலைக்கவசங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட மற்றும் அம்பலாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.