தப்பியோட முயன்ற பிரபல போதை வர்த்தகரின் சகாவிற்கு நேர்ந்த சோகம்
போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பரான திலின சம்பத் எனப்படும் 'வலஸ் கட்டா' பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற போது, இரண்டு கால்களிலும் கை ஒன்றிலும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை
இந்நிலையில், நேற்று (09) இரவு 9:15 மணியளவில், சந்தேகநபர் மலசலக்கூடத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரது கைவிலங்குகளை கழட்டிய பின்னர் நான்கு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
மலசலக்கூடத்துக்குச் செல்லும் வழியில், வலஸ் கட்டா அதிகாரிகளைத் தாக்கி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதன்போது, அவரது இரண்டு கால்களும் முறிந்துள்ளன, மேலும் அவரது கை ஒன்றின் முழங்கை உடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.