காதலியின் நடத்தையில் சந்தேகம் ; கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன்
இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா (36) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்துள்ளார். அவரது மகன் மற்றும் மகள் தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த ராதிகா, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனமொன்றில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் பணியாற்றிய திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருக்கும் ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதுடன், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராதிகா செல்போனில் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அருண்குமாருக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் ராதிகாவின் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாகவும், அப்போது கட்டிலில் தலை மோதியதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் ராதிகா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
ராதிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ராதிகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அருண்குமார் அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.