சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும், முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு எதிராக அவதூறான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டதாகவும், அவ்வாறான தகவல்களைப் பரப்புவதற்கு சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்களைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதன்படி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் மாதத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.