சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம் தொடர்பில் புதிய திருப்பம் ; சிறைகாவலர்கள் மீது கடும் நடவடிக்கை
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் இன்று (28) மாலை கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரையில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகம் என்பன மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
நேற்று (27) காலை மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மரணம் தொடர்பாக ஏற்கனவே சிறைச்சாலை ஜெயிலர் ஒருவரும் இரண்டு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.