சர்வதேசக் கடன் சந்தையில் மீண்டும் இலங்கை? IMF கணிப்பைத் தெளிவுபடுத்திய பிரதி அமைச்சர்
2028ஆம் ஆண்டளவில் சர்வதேச இறைமைப் பிணைமுறிகளை (Sovereign Bonds) வெளியிடுவதன் மூலம் இலங்கையால் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முடியும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.
எனினும், சர்வதேச சந்தையில் பிரவேசிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவை இலங்கை அரசாங்கமே எடுக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வு அறிக்கைகளில், 2026ஆம் ஆண்டுக்கான இறைமைப் பிணைமுறி வெளியீடு எதுவும் கணிக்கப்படவில்லை.

எனினும், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் தலா 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவை சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட கணிப்புகளே தவிர, இலங்கை அதிகாரிகளின் கணிப்புகள் அல்ல எனப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர், பிணைமுறிகளை வெளியிடுவது தொடர்பில் அரசாங்கம் அவ்வப்போது தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலக் கடன் பெறுகைகளுக்கு மேலதிகமாக, அரசாங்கத்துக்குக் குறுகியகால வெளிநாட்டுச் செலாவணிப் பொறுப்புகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2026 மே மாத இறுதியில் நிலுவையில் இருக்கும் நாணயப் பரிமாற்ற ஒப்பந்தங்களின் (Currency Swaps) மொத்தப் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதில் 1.8 பில்லியன் டொலர்கள் சர்வதேச ரீதியிலும், 2.3 பில்லியன் டொலர்கள் உள்நாட்டிலும் உள்ளன. உள்நாட்டு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தங்களில் 83 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தவிர, ஏனைய அனைத்தும் 12 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கத்தின் கடன் தொகுப்பில் உள்ள அபாயங்களைக் குறைப்பதற்காக அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் (PDMO) சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும், சந்தை நிலைமைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.