சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்; மகிழ்ச்சித் தகவல்!
சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல முக்கிய இடங்களில் கேபிள் கார் (Cable Car) திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) அன்று நடைபெற்ற 'சுற்றுலாச் செயலணிக் கூட்டத்தில்' இது தொடர்பான தீர்மானங்கள் எட்டப்பட்டன.

சிவனொளிபாத மலையை மையப்படுத்தி கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாகப் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவனொளிபாத மலைக்கு மேலதிகமாகக் கிகிலியாமான மற்றும் எல்ல உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
இவ்விடங்களில் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தேவையான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது