வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி ; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, நாளை (14) முற்பகல் 5.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை, வட அகலாங்கு 5 முதல் 15 பாகைக்கும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 பாகைக்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளுக்கு அப்பாலான கடற்பரப்புகளிலும் கடல்சார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்பு
குறித்த ஆபத்தான கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நெடுநாள் மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட அனைத்துப் படகுகளும் உடனடியாகப் பாதுகாப்பான கடற்பரப்புகளுக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அவசர அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, நவம்பர் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் இது சூறாவளியாக வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, அதிகாரபூர்வ வானிலை அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.