ரூ. 461 பில்லியன் வரி வருமானம் இழந்த அரசாங்கம்
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் காரணமாக அரசாங்கத்திற்கு ரூ.461.49 பில்லியன் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையின்படி, பெறுமதி சேர் வரி (VAT) சலுகைகளால் ரூ.242.95 பில்லியனும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) சலுகைகளால் ரூ.135.27 பில்லியனும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சுங்க இறக்குமதி வரிச் சலுகைகளால் ரூ.74.25 பில்லியனும், உற்பத்தி வரிச் சலுகைகளால் ரூ.9.02 பில்லியனும் அரச வருமானம் குறைந்துள்ளது. உற்பத்தி வரிச் சலுகைகளில் பெரும்பகுதி உள்நாட்டில் பொருத்தப்படும் வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிறுவன வருமான வரிச் சலுகைகளால் ஏற்பட்ட வருமான இழப்பு 2023/24ஆம் ஆண்டில் ரூ.119.29 பில்லியனாக இருந்த நிலையில், 2024/25ஆம் ஆண்டில் ரூ.186.07 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, தனிநபர் வருமான வரிச் சலுகைகளால் ஏற்பட்ட இழப்பும் ரூ.10.46 பில்லியனிலிருந்து ரூ.36.28 பில்லியனாக உயர்ந்துள்ளது. முதலீடுகள், ஏற்றுமதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், அரச வருமானத்தில் ஏற்படும் பாதிப்பைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான வரிச் சலுகைகளின் நிதி மற்றும் பொருளாதார தாக்கங்களைத் தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது