ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த நபர் பரிதாப மரணம்
இந்தியாவில் ரசகுல்லா என நினைத்து வெடிபொருளைக் கடித்த 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியா மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெடிபொருளை ரசகுல்லா போன்று மறைத்து வைத்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது சாந்தா கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராஜேந்திர பரௌட்டியா (35) என்பவர் மேலும் சிலருடன் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருந்தபோது, அவரது நண்பரான ராம் பகத் என்பவர் ரசகுல்லா எனக் கூறி குறித்த வெடிபொருளை அவரது வாயில் வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது இருவரும் பேசிக்கொண்டும் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டும் இருந்ததாக திண்டோரி கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பதிகாரி நாக்புரே தெரிவித்துள்ளார்.
இதன்போது வெடிபொருள் அவரது வாயிலேயே வெடித்துச் சிதறியதில் பலத்த காயமடைந்த அவர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.