சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார்; திருமுருகன் காந்தி
இந்திய முன்னாள பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்ப்வத்தில் 32 ஆண்டுகள் சிறையிலிருந்த இலங்கைதமிழரான சாந்தன் இன்று தமிழகத்தில் ,உயிரிழந்தார்.
இந்நிலையில் சாந்தன் இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார் என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார் சாந்தன் மரணம் குறித்து திருமுருகன் காந்தி மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலும், தாயை சந்திக்காமலும் விடைபெற்றுவிட்டார்
எது நடந்துவிடக்கூடாது என அச்சப்பட்டோமோ அது நடந்துவிட்டது. தோழர் சாந்தன் இயற்கையெய்திய செய்தி துயரமான நாளாக்கிவிட்டது. சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலும், தாயை சந்திக்காமலும் விடைபெற்றுள்ளார்.
இந்திய அரசின் வன்மத்திற்கு பலியாகியுள்ளார். வேலூர் சிறையில் அவரைச் சந்தித்துள்ளேன். துயரமும், அவநம்பிக்கையும் சூழ்ந்த நிலையில் மிக அமைதி தோய்ந்த அவரது முகம் நினைவில் என்றும் நிற்கும்.
2018 ஆகஸ்டில் சந்தித்த சமயத்தில் அன்றய அதிமுக அரசின் முடிவால் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. 'நாங்கள் வெளியே போய்விடுவோம், வெளியே உங்கள் உடல்நலம் பற்றி சொல்கிறோம்' என்றார் முருகன்.
விடுதலை செய்யப்பட வேண்டுமென அரசு முடிவெடுக்கப்பட்டு ஒன்றிய அரசால், ஆளுனரால் தடுக்கப்பட்ட நீதிக்கு இயற்கை விடுதலை கொடுத்திருக்கிறது. சிறப்பு முகாமெனும் சித்தரவதை முகாமில் நம்மைவிட்டு சிறைவாசத்திலேயே பிரிந்திருக்கிறார் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
அதேவேளை சாந்தன் இலங்கை திரும்ப இந்திய மத்திய அரசாங்கம் அனுமதியளித்திருந்த நிலையில், சாந்தனின் தாயார் மகனுக்காக யாழ்ப்பாணத்தில் காத்திருருந்த நிலையில் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டிருந்த சாந்தன் இறுவரை தாயாரை சந்திக்காமலே உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.