பப்ஜி விளையாட்டு மோகம் ; இளைஞனுக்கு நேர்ந்த கதி
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், வீட்டில் பிரபலமான PUBG: Battlegrounds விளையாட்டை நீண்ட நேரம் விளையாடும் பழக்கமுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் ஹெட்போன் அணிந்து விடிய விடிய கேம் விளையாடுவது வழக்கமாக இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சம்பவம் நடந்த தினத்திலும் அவர் வழக்கம்போல் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
சில நொடிகளில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக புதுடெல்லி நகரிலுள்ள சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவ தகவலின்படி, அதிகரித்த இரத்த அழுத்தத்தால் மூளையில் இரத்த நாளம் வெடித்ததே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இளைஞரின் தந்தை தெரிவித்ததாவது, கடந்த பத்து ஆண்டுகளாக அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறினார்.
எனினும், நீண்ட நேரம் தொடர்ந்து கேம் விளையாடியதே திடீர் உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தியிருக்கலாம் என குடும்பத்தினர் நம்புகின்றனர்.
இந்தச் சம்பவம், வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் பழக்கம் மற்றும் நீண்ட நேரம் கண்விழித்து இருப்பது போன்றவற்றின் உடல்நலப் பாதிப்புகள் குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.