இந்தியாவில் சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்து
இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் - விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே கப்பல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் சுமார் 24 பணியாளர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் 21 பேர் உயிர் காப்பு அங்கிகளை பயன்படுத்தி தப்பிக்க முடிந்த போதும் மீதமுள்ள பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், கப்பலில் உள்ள ஆபத்தான பொருட்கள் குறித்து இந்திய கடலோர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கரையில் கரையொதுங்கியிருக்கக்கூடிய ஏதேனும் கொள்கலன்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு இந்திய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கேரளா முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் கடலோர காவல் படையினர் அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், கரையில் ஒதுங்கக்கூடிய அடையாளம் தெரியாத பொருட்களை அணுக வேண்டாம் என்றும் எச்சரிக்கைகளை வெளியிட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.