தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல்
அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பில் கல்விச் செயலமர்வு ஒன்றிற்கு மாணவியை அழைக்கச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய ஆசிரியர் மற்றும் அதிபர் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதல் காரணமாக அவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று (23) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் பொது மக்களின் உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரின் கீழ் பாடசாலையில் கல்வி கற்கும் க.பொ.த.சாதாரண தர மாணவர்கள் சிலருக்கு இன்று (23) விசேட பயிற்சி செயலமர்வொன்று தம்பட்டையில் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் அதிபரின் உத்தரவிற்கமைய நேற்று பிற்பகல் வேளையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆசிரியர் நாளைய பயிற்சி செயலமர்விற்கு செல்வதற்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை முன்பாக ஒன்று கூடுமாறு கூறியுள்ளார்.
இவ்வாறு சில மாணவர்களது வீட்டிற்குச் சென்று தகவலை வழங்கிவிட்டு இன்னுமொரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகவலை வழங்க முற்பட்ட நிலையில் அவ்வீட்டில் சலசலப்பு சத்தம் கேட்டு தான் சென்ற மோட்டார் சைக்கிளில் திரும்ப எத்தணித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வீட்டில் இருந்து வெளிவந்த ஒருவர் ஆசிரியரை வாளால் தாக்கி உள்ளதாக அதிபர் கூறினார்.
இதனையடுத்து குறித்த ஆசிரியர் தனக்கு தகவலை வழங்கிய நிலையில் தானும் அவ்விடத்திற்கு சென்றதாகவும் அங்கு ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை குறித்த நபர் உடைப்பதை அவதானித்ததாகவும் அதிபர் கூறினார்.
உடன் தான் ஆசிரியரை காப்பாற்றி கொண்டு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஆசிரியரை ஏற்றுவதற்கு முற்பட்டபோது தனது மோட்டார் சைக்கிளையும் உதைத்த நபர் வாளால் தன்னையும் தாக்கியதாக குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாதுகப்பற்ற நிலையில் ஆசிரியர்களும் அதிபர்களும் கற்பித்தல் நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுவது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அன்மைக்காலமாக அச்சுறுத்தும் நிலை அதிகரித்து வருவதுடன் வீதிகளிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.