சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

அவரது பதிலுரையில் தி.மு.க. தொடர்பான விமர்சனங்கள் இடம்பெற்றதாகவும், குறிப்பாக மிசா சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் மற்றும் சர்க்காரியா ஆணைய அறிக்கை உள்ளிட்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
இதன்போது முதலமைச்சரின் சில உடல்மொழி தொடர்பில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
உருவ கேலி செய்யும் வகையில் யார் பேசினாலும் அது கண்டனத்திற்குரியது என்றும், சட்டமன்றம் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், சட்டமன்றத்தில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்தவொரு உள்நோக்கமும் கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.