பிரச்சினை முடிந்துவிட்டது, ஏன் இன்னும் ஆடுகிறார்கள் ; கடும் தொனியில் ஜனாதிபதி அநுர
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நேற்று (18) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருகோணமலை விவகாரம்
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்
திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. தோல்வியடைந்த அரசியல் தரப்பினர் தற்போது இனவாதம் மற்றும் மதவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சிடம் அறிக்கை கோரியுள்ளேன். இந்த விடயத்துக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும்.
இதுவரை காலமும் அந்த இடம் விகாரையாக அடையாளப்படுத்தப்படவில்லை. சிற்றுண்டிச்சாலையாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காணி குறித்து கரையோர அதிகார சபை முறைப்பாடளித்து, அங்கு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இந்த கட்டிடத்தை அகற்றுவதற்கு ஒருவார காலவகாசம் கோரப்பட்டுள்ளது.
இறுதி தினத்தன்று தான் இந்த சம்பவம் இடம்பெற்று, புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டு, பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.