மத்திய கிழக்கு பதற்றத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு பாரிய சிக்கல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக, ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஸிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் தாயகம் திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ளன.
சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறிய இரு அணிகளும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக தத்தமது நாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தன.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய முக்கிய வானூர்தி நிலையங்களின் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச போக்குவரத்து மையமான டுபாய் வானூர்தி நிலையம் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான வானூர்திகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
"எமது வீரர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளனர். டுபாய் ஊடாக நாடு திரும்பவிருந்த திட்டங்கள் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ளன," என ஸிம்பாப்வே கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வீரர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர ஐசிசி மற்றும் வானூர்தி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகத்திற்கு அருகாமையில் கடந்த சில நாட்களில் பல வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், உலகக் கிண்ணத் தொடருடன் தொடர்புடைய அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட அவசரத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தற்போது இந்தியாவிலேயே தங்கியுள்ளன.
இத்தொடரின் இணை நாடான இலங்கையில் போட்டிகள் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.