போலி செய்திகளால் இங்கிலாந்தில் கோடிகளை குவிக்கும் இலங்கை இளைஞன்!
இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் பிரித்தானியா தொடர்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக் பக்கங்களை நடத்தி 230,000 பவுண்ட்ஸ்களை சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
கீத் சூரியபுர (Geeth Sooriyapura) என்ற இலங்கையரும் அவரது மாணவர்களும் 100க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களில், தொழிலாளர் கட்சி இஸ்லாத்திற்குச் சொந்தமானது என்றும், லண்டனின் கவுன்சில் வீடுகள் முஸ்லிம்களுக்கு மட்டுமே அணுகக்கூடியவை என்றும் கூறுகின்றனர்.

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தவறான தகவல்
கீத் சூரியபுர (Geeth Sooriyapura) ஒரு கல்விக் கூடத்தை நடத்தி வருகிறார். இந்தக் கல்விக்கூடத்தில் இது போன்ற பேஸ்புக் பக்கங்களை எவ்வாறு அமைப்பது என்பதை ஏனையவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
பின்னர் கீத் சூரியபுர (Geeth Sooriyapura) இந்தப் பக்கங்களில் உள்ள வீடியோக்களில் காட்டப்படும் விளம்பரங்களிலிருந்து பணம் சம்பாதிக்கிறார். மேலும், தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்.

கீத் சூரியபுர (Geeth Sooriyapura) மற்றும் அவரது மாணவர்கள் 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இது பிரித்தானியாவின் புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரியபுர (Geeth Sooriyapura) விலையுயர்ந்த கடிகாரங்களை அணிந்திருப்பதை காணொளிகள் மற்றும் புகைப்படங்களில் வெளிப்படுத்துகிறார்.
மேலும், ஐந்து நட்சத்திர உணவகங்களில் தானும் நண்பர்களும் சாப்பிடும் படங்களைப் பகிர்ந்து கொள்கிறார், நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு குடியிருப்பில் இருக்கும் வீடியோக்களையும் வெளியிடுகிறார்.
பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார்
இலங்கையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் பிரித்தானியாவில் குடியிருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை எனக் காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார் என்ற பொய்த்தகவலை முதல் முறையாகக் குறித்த நபர் தமது முகப்புத்தக பக்கம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.

பிரித்தானி , புலனாய்வு இதழியல் பணியகம் அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட நிலையில், "இது தவறான புரிதல் என்றும், வன்முறையைப் பரப்புவதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், 128 பேஸ்புக் பக்கங்களைத் தாம் நிர்வகிக்கவில்லை" எனவும் பதிலளித்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.