ஹெலியில் மறைந்த கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம்
அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய கொள்கைப் பற்றாளருமான கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம் இன்று (16) அனுஷ்டிக்கப்படுகிறது.
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரப் உள்ளிட்டவர்களுடன் கதிர்காமத்தம்பியும் உயிரிழந்தார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் வீரமுனை மண்ணில் 1951ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பிறந்த கதிர்காமத்தம்பி, தனது இளமைப் பருவத்திலேயே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அவரது நினைவு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அ.அமிர்தலிங்கத்துடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட அவர், பின்னர் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பாட்டாளராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
1977 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் இருந்த அ.அமிர்தலிங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றியதுடன், அக்காலகட்டத்தின் பல முக்கிய தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களுடனும் அவர் தொடர்புகளைப் பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் கதிர்காமத்தம்பி முக்கிய பங்காற்றியதாக அவரது அரசியல் பயணம் தொடர்பான பதிவுகள் குறிப்பிடுகின்றன.
1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேசத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாகப் போட்டியிட்ட அவர், 1989 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விகிதாசாரத் தேர்தல்களிலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றிய கதிர்காமத்தம்பி, இந்தியாவில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரியில் வைத்தியப் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதநேய அடிப்படையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டதுடன், பலருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவரை நினைவுகூரும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.