குடும்பத் தகராறு ; மனைவியின் மூக்கை கடித்துக் குதறிய கணவன்
குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா, தெலங்கானா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், , மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிசந்தர் என்பவருக்கும், கொட்டபள்ளியைச் சேர்ந்த மமதா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தொடர் குடும்பத் தகராறுகள்
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணிசந்தர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறுகள் மற்றும் மனவேதனை காரணமாக, மமதா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோட்டபள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.
மனைவியை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மணிசந்தர் தனது மாமனார் நாராயணன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மாமனார் நாராயணனை மணிசந்தர் கட்டையால் தாக்கி பலத்த காயப்படுத்தியுள்ளார். தனது தந்தையைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்த முயன்ற மனைவியின் மீது ஆத்திரமடைந்த மணிசந்தர், திடீரென அவரது மூக்கை கடித்துக் குதறியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் மமதா அலறித் துடித்துள்ளார். சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த மமதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.